இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone பேட்டரி பயன்பாடு மற்றும் ஆயுள் பற்றிய தகவல்களைப் புரிந்துகொள்ளுதல்

உங்கள் பேட்டரி ஆயுளைப் பற்றிய பயனுள்ள நுண்ணறிவுகளை iPhone வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்தும் வழிகளையும் உங்கள் பேட்டரியின் ஒட்டுமொத்த ஆயுள் பற்றிய முக்கியமான தகவல்களையும் நீங்கள் கண்டறியலாம்.

தினசரிப் பயன்பாட்டுத் தகவல்களைப் பார்த்தல்

“தினசரிப் பயன்பாடு” பிரிவு முந்தைய நாட்களுடன் ஒப்பிட்டு உங்களின் இன்றைய பேட்டரிப் பயன்பாட்டுச் சுருக்கவிவரத்தைக் காட்டும். பின்வரும் பேட்டரி பயன்பாட்டுத் தகவலை iPhone காட்டும்:

  • ஒரே மாதிரியான அல்லது குறைவான பயன்பாடு: நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (நீல நிறத்தில் காட்டப்படும்) உங்கள் பேட்டரி பயன்பாடு வழக்கம்போல ஒரே மாதிரியாக இருக்கும்போதோ வழக்கத்தைவிடக் குறைவாக இருக்கும்போதோ இது காட்டப்படும். பயன்பாடு ஒரே மாதிரியாக இருக்கும்போது, இன்றைய பயன்பாட்டிற்குப் பங்களிக்கும் முதல் மூன்று செயலிகள் அல்லது சிஸ்டம் செயல்பாடுகளை iPhone ஹைலைட் செய்து காட்டும்.

  • அதிகப் பயன்பாடு: நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (ஆரஞ்சு நிறத்தில்) பேட்டரி பயன்பாடு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்போது இது காட்டப்படும். பேட்டரி பயன்பாடு அதிகரித்திருப்பதற்குக் காரணமான முதல் மூன்று செயலிகள் அல்லது சிஸ்டம் செயல்பாடுகளை iPhone ஹைலைட் செய்து காட்டும்.

iPhone அமைப்புகளில் உள்ள “பேட்டரி பயன்பாடு” திரையில் கிராஃப்களும் பேட்டரி பயன்பாடு குறித்த தகவல்களும் காட்டப்பட்டுள்ளன. கடந்த எட்டு நாட்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரி குறித்த தகவல் மேலே பார் கிராஃபில் காட்டப்பட்டுள்ளது. அதற்குக் கீழே, சார்ஜ் ஆகியுள்ள காலத்தைக் குறிப்பதுடன் இன்று முழுவதும் இருந்த பேட்டரி அளவைப் பற்றியும் இரண்டாவது கிராஃப் விவரிக்கிறது.

தினசரிப் பயன்பாட்டுத் தகவல்களைப் பார்க்க:

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “பேட்டரி” என்பதைத் தட்டவும்.

கூடுதல் பேட்டரி பயன்பாட்டுத் தகவலைப் பார்த்தல்

இன்று மற்றும் முந்தைய வாரத்தின் செயலி மற்றும் சிஸ்டம் செயல்பாட்டுப் பயன்பாடு பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் பார்க்கலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “பேட்டரி” என்பதைத் தட்டி, “பேட்டரி பயன்பாடு குறித்த தகவல்கள் அனைத்தையும் காட்டு” என்பதைத் தட்டி ஒரு குறிப்பிட்ட நாளைத் தட்டவும்.

iPhone அமைப்புகளில் உள்ள “பேட்டரி பயன்பாடு” திரை. இரண்டு வரைபடங்கள் காட்டப்பட்டுள்ளன: மேலே உள்ள வரைபடத்தில், கடந்த வாரத்தின் தினசரி பேட்டரிப் பயன்பாடு காட்டப்பட்டுள்ளது. கீழே உள்ள வரைபடத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட நாளின் சார்ஜிங் காலகட்டங்கள் உட்பட, பேட்டரி அளவு குறித்த விவரங்கள் காட்டப்பட்டுள்ளன. வரைபடங்களுக்குக் கீழே, திரை செயலில் இருந்த மற்றும் செயலில் இல்லாத மொத்த நேரத்தின் சுருக்கவிவரம் காட்டப்பட்டுள்ளது.

செயலி மற்றும் சிஸ்டம் செயல்பாட்டுத் தகவல்களைப் பார்த்தல்

ஒவ்வொரு செயலியும் சிஸ்டம் செயல்பாடும் பயன்படுத்தும் பேட்டரி சதவீதத்தைப் பட்டியலிட்டுக் காட்டி, உங்கள் பேட்டரி பயன்பாட்டு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள “செயலி மற்றும் சிஸ்டம் செயல்பாடு” பிரிவு உதவும்.

செயலி அல்லது சிஸ்டம் செயல்பாட்டின் கீழே அல்லது கூடுதல் விவரங்களைப் பார்க்க ஒரு செயலியைத் தட்டும்போது பின்வரும் தகவல்கள் காட்டப்படக்கூடும். அவற்றின் அர்த்தம் என்ன என்பதைக் கீழே பாருங்கள்:

  • திரையில்: செயலி அல்லது சிஸ்டம் செயல்பாடு திறக்கப்பட்டு உங்கள் திரையில் காட்டப்பட்டுள்ளது. திரை நீண்டநேரம் பயன்பாட்டில் இருந்ததால் முந்தைய நாட்களை ஒப்பிடும்போது பேட்டரி பயன்பாடு அதிகமாக இருக்கலாம்.

  • பின்னணி: பின்னணியில் நீண்டநேரம் இயங்கியதால் முந்தைய நாட்களை ஒப்பிடும்போது பேட்டரி பயன்பாடு அதிகமாக இருக்கலாம். வழிகளைப் பெறுதல், இசையை பிளே செய்தல், புகைப்படங்களை ஒத்திசைத்தல், மின்னஞ்சல்களைப் பெறுதல் போன்றவை பின்னணிச் செயல்பாடுகளில் அடங்கும்.

  • மொபைல் சேவை கவரேஜ்: குறைந்த சிக்னல் சூழலில் செயலி பயன்படுத்தப்பட்டதால், அதிக பேட்டரியைப் பயன்படுத்தியது.

  • அறிவிப்புகள்: புதிய தகவலைக் காட்டுவதற்காக, செயலி அல்லது சிஸ்டம் செயல்பாடு உங்கள் சாதனத்தைச் செயல்படுத்தி பேட்டரியைப் பயன்படுத்தியுள்ளது. செயலியின் அறிவிப்பு அமைப்புகளில் இதை நீங்கள் குறைக்கலாம்.

iPhone அமைப்புகளில் உள்ள “பேட்டரி பயன்பாடு” திரையில் ஒவ்வொரு செயலியும் பயன்படுத்தும் பேட்டரி அளவு குறித்த தகவல் தனித்தனியே காட்டப்படுவதுடன் “செயலி மற்றும் சிஸ்டம் செயல்பாட்டுப் பயன்பாடு” பட்டியலும் காட்டப்பட்டுள்ளது. செயலி பயன்படுத்தக்கூடிய பேட்டரி சதவீதம், செயலியின் திரை அல்லது பின்னணிச் செயல்பாட்டு நேரம் ஆகிய விவரங்கள் ஒவ்வொரு செயலிக்கும் பட்டியலிடப்பட்டுள்ளன.

செயலி மற்றும் சிஸ்டம் செயல்பாட்டுத் தகவல்களைப் பார்க்க:

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • இன்றைய விவரங்களைப் பார்க்க: “பேட்டரி” என்பதைத் தட்டி, கீழே ஸ்க்ரால் செய்யவும்.

    • இன்றைய மற்றும் முந்தைய நாட்களுக்கான கூடுதல் பேட்டரி தகவல்கள் பார்க்க: “பேட்டரி” என்பதைத் தட்டி, “அனைத்து பேட்டரி பயன்பாட்டையும் காட்டு” என்பதைத் தட்டி ஒரு குறிப்பிட்ட நாளைத் தட்டி, கீழே ஸ்க்ரால் செய்யவும்.

  3. ஒரு குறிப்பிட்ட செயலியின் பேட்டரி பயன்பாடு மற்றும் ஒவ்வொரு நாளுக்கான செயல்பாடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களைப் பார்க்க, அந்தச் செயலியைத் தட்டவும்.

iPhone கடைசியாக சார்ஜ் செய்யப்பட்ட நேரத்தைப் பார்த்தல்

பேட்டரி கடைசியாக எப்போது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டது, சார்ஜரில் இருந்து எப்போது துண்டிக்கப்பட்டது என்பதை iPhone காட்டும். சார்ஜ் செய்யும்போது, 80% மற்றும் 100% எட்டுவதற்கு ஆகும் கணக்கிடப்பட்ட நேரத்தை iPhone காட்டும். சார்ஜிங் குறித்து மேலும் தெரிந்துகொள்ள iPhone பேட்டரியை சார்ஜ் செய்தல்-ஐப் பார்க்கவும்.

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “பேட்டரி” என்பதைத் தட்டவும்.

உங்கள் iPhone பேட்டரி ஆயுளை மதிப்பாய்வு செய்தல்

உங்கள் பேட்டரியின் திறன் பற்றிய தகவல்களை iPhone காட்டும். iPhone 15 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்களில், பேட்டரி திறன், சுழற்சி எண்ணிக்கை, உற்பத்தித் தேதி, முதல் பயன்பாட்டுத் தேதி போன்ற விவரங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “பேட்டரி” என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • iPhone 14 அல்லது அதற்கு முந்தைய மாடல்களில்: “பேட்டரி ஆயுள் மற்றும் சார்ஜிங்” என்பதைத் தட்டவும்.

    • iPhone 15 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்களில்: “பேட்டரி ஆயுள்” என்பதைத் தட்டவும்.

பயன்பாடு மற்றும் அமைப்புகளைப் பொறுத்து பேட்டரியின் ஆயுள் மற்றும் சார்ஜ் சுழற்சிகள் மாறுபடும். உங்கள் பேட்டரியின் செயல்திறனையும் ஆயுளையும் எப்படி அதிகரிப்பது என்பதை அறிய, iPhone பேட்டரி மற்றும் செயல்திறன் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Apple அல்லது Apple அங்கீகரித்த சேவை வழங்குநரால் iPhone பேட்டரி பழுதுபார்க்கப்பட வேண்டும் அல்லது மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். பேட்டரி பழுதுபார்ப்பு மற்றும் மறுசுழற்சி தொடர்பான இணையதளத்தைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.