இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad பேட்டரி பயன்பாடு மற்றும் ஆயுள் பற்றிய தகவல்களைப் புரிந்துகொள்ளுதல்

உங்கள் பேட்டரி ஆயுளைப் பற்றிய பயனுள்ள நுண்ணறிவுகளை iPad வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்தும் வழிகளையும் உங்கள் பேட்டரியின் ஒட்டுமொத்த ஆயுள் பற்றிய முக்கியமான தகவல்களையும் நீங்கள் கண்டறியலாம்.

தினசரிப் பயன்பாட்டுத் தகவல்களைப் பார்த்தல்

“தினசரிப் பயன்பாடு” பிரிவு முந்தைய நாட்களுடன் ஒப்பிட்டு உங்களின் இன்றைய பேட்டரிப் பயன்பாட்டுச் சுருக்கவிவரத்தைக் காட்டும். பின்வரும் பேட்டரி பயன்பாட்டுத் தகவலை iPad காட்டும்:

  • ஒரே மாதிரியான அல்லது குறைவான பயன்பாடு: நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (நீல நிறத்தில் காட்டப்படும்) உங்கள் பேட்டரி பயன்பாடு வழக்கம்போல ஒரே மாதிரியாக இருக்கும்போதோ வழக்கத்தைவிடக் குறைவாக இருக்கும்போதோ இது காட்டப்படும். பயன்பாடு ஒரே மாதிரியாக இருக்கும்போது, இன்றைய பயன்பாட்டிற்குப் பங்களிக்கும் முதல் மூன்று செயலிகள் அல்லது சிஸ்டம் செயல்பாடுகளை iPad (நீல நிறத்தில்) ஹைலைட் செய்து காட்டும்.

  • அதிகப் பயன்பாடு: நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பேட்டரி பயன்பாடு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்போது இது (ஆரஞ்சு நிறத்தில்) காட்டப்படும். பேட்டரி பயன்பாடு அதிகரித்திருப்பதற்குக் காரணமான முதல் மூன்று செயலிகள் அல்லது சிஸ்டம் செயல்பாடுகளை iPad ஹைலைட் செய்து காட்டும்.

iPad அமைப்புகளில் உள்ள “பேட்டரி” திரை. இதில் “தினசரிப் பயன்பாடு” கிராஃப், பேட்டரி பயன்பாட்டு விவரங்களுடன் செயலிகளின் பட்டியல், பேட்டரி ஆயுள், பேட்டரி சதவீதம், குறைந்த ஆற்றல் பயன்முறை அமைப்புகள் ஆகியவை காட்டப்பட்டுள்ளன.

தினசரிப் பயன்பாட்டுத் தகவல்களைப் பார்க்க:

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “பேட்டரி” என்பதைத் தட்டவும்.

கூடுதல் பேட்டரி பயன்பாட்டுத் தகவலைப் பார்த்தல்

இன்று மற்றும் முந்தைய வாரத்தின் செயலி மற்றும் சிஸ்டம் செயல்பாட்டுப் பயன்பாடு பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் பார்க்கலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “பேட்டரி” என்பதைத் தட்டி, “பேட்டரி பயன்பாடு குறித்த தகவல்கள் அனைத்தையும் காட்டு” என்பதைத் தட்டி ஒரு குறிப்பிட்ட நாளைத் தட்டவும்.

iPad அமைப்புகளில் உள்ள “பேட்டரி பயன்பாடு” திரை. இதில் இரண்டு கிராஃப்கள் காட்டப்பட்டுள்ளன: ஒன்றில் கடந்த வாரத்தின் தினசரிப் பயன்பாடு காட்டப்பட்டுள்ளது, மற்றொன்றில் தேர்ந்தெடுத்த நாளின் பேட்டரி அளவு முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே செயலிகளின் பேட்டரி பயன்பாட்டுச் சதவீதம், செயல்பாட்டு நேரம் ஆகியவை பட்டியலில் காட்டப்பட்டுள்ளன.

செயலி மற்றும் சிஸ்டம் செயல்பாட்டுத் தகவல்களைப் பார்த்தல்

ஒவ்வொரு செயலியும் சிஸ்டம் செயல்பாடும் பயன்படுத்தும் பேட்டரி சதவீதத்தைப் பட்டியலிட்டுக் காட்டி, உங்கள் பேட்டரி பயன்பாட்டு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள “செயலி மற்றும் சிஸ்டம் செயல்பாடு” பிரிவு உதவும்.

செயலி அல்லது சிஸ்டம் செயல்பாட்டின் கீழே அல்லது கூடுதல் விவரங்களைப் பார்க்க ஒரு செயலியைத் தட்டும்போது பின்வரும் தகவல்கள் காட்டப்படக்கூடும். அவற்றின் அர்த்தம் என்ன என்பதைக் கீழே பாருங்கள்:

  • திரையில்: செயலி அல்லது சிஸ்டம் செயல்பாடு திறக்கப்பட்டு உங்கள் திரையில் காட்டப்பட்டுள்ளது. திரை நீண்டநேரம் பயன்பாட்டில் இருந்ததால் முந்தைய நாட்களை ஒப்பிடும்போது பேட்டரி பயன்பாடு அதிகமாக இருக்கலாம்.

  • பின்னணி: பின்னணியில் நீண்டநேரம் இயங்கியதால் முந்தைய நாட்களை ஒப்பிடும்போது பேட்டரி பயன்பாடு அதிகமாக இருக்கலாம். வழிகளைப் பெறுதல், இசையை பிளே செய்தல், புகைப்படங்களை ஒத்திசைத்தல், மின்னஞ்சல்களைப் பெறுதல் போன்றவை பின்னணிச் செயல்பாடுகளில் அடங்கும்.

  • மொபைல் சேவை கவரேஜ்: குறைந்த சிக்னல் சூழலில் செயலி பயன்படுத்தப்பட்டதால், அதிக பேட்டரியைப் பயன்படுத்தியது.

  • அறிவிப்புகள்: புதிய தகவலைக் காட்டுவதற்காக, செயலி அல்லது சிஸ்டம் செயல்பாடு உங்கள் சாதனத்தைச் செயல்படுத்தி பேட்டரியைப் பயன்படுத்தியுள்ளது. செயலியின் அறிவிப்பு அமைப்புகளில் இதை நீங்கள் குறைக்கலாம்.

iPad அமைப்புகளில் உள்ள “பேட்டரி” திரையில் Safari செயலிக்கான பேட்டரி பயன்பாடு விரிவாகக் காட்டப்பட்டுள்ளது. திரையில் “தினசரிப் பயன்பாடு” கிராஃபும், மொபைல் சேவை கவரேஜால் பேட்டரி ஆயுள் எப்படிப் பாதிக்கப்பட்டது என்ற குறிப்பும் காட்டப்பட்டுள்ளன. மேலும், செயலிக்கான திரை மற்றும் பின்னணிச் செயல்பாட்டு நேரங்கள் பிரித்துக் காட்டப்பட்டுள்ளன.

செயலி மற்றும் சிஸ்டம் செயல்பாட்டுத் தகவல்களைப் பார்க்க:

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • இன்றைய விவரங்களைப் பார்க்க: “பேட்டரி” என்பதைத் தட்டி, கீழே ஸ்க்ரால் செய்யவும்.

    • கடந்த எட்டு நாட்களுக்கான தகவலைப் பார்த்தல்: “பேட்டரி” என்பதைத் தட்டி, “அனைத்து பேட்டரி பயன்பாட்டையும் காட்டு” என்பதைத் தட்டி ஒரு குறிப்பிட்ட நாளைத் தட்டி, கீழே ஸ்க்ரால் செய்யவும்.

  3. ஒரு குறிப்பிட்ட செயலியின் பேட்டரி பயன்பாடு மற்றும் ஒவ்வொரு நாளுக்கான செயல்பாடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களைப் பார்க்க, அந்தச் செயலியைத் தட்டவும்.

iPad கடைசியாக சார்ஜ் செய்யப்பட்ட நேரத்தைப் பார்த்தல்

பேட்டரி கடைசியாக எப்போது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டது, சார்ஜரில் இருந்து எப்போது துண்டிக்கப்பட்டது என்பதை iPad காட்டும்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “பேட்டரி” என்பதைத் தட்டவும்.

உங்கள் iPad பேட்டரி ஆயுளை மதிப்பாய்வு செய்தல்

ஆதரிக்கப்படும் மாடல்களில், பேட்டரி திறன், பேட்டரி ஆயுள், சுழற்சி எண்ணிக்கை, உற்பத்தித் தேதி, முதல் பயன்பாட்டுத் தேதி போன்ற விவரங்களை iPad காட்டும்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “பேட்டரி” என்பதைத் தட்டி, “பேட்டரி ஆயுள்” என்பதைத் தட்டவும்.

பயன்பாடு மற்றும் அமைப்புகளைப் பொறுத்து பேட்டரி ஆயுள் மற்றும் சார்ஜ் செய்யப்படும் சுழற்சிகள் மாறுபடும். Apple அல்லது Apple அங்கீகரித்த சேவை வழங்குநரால் iPad பேட்டரி பழுதுபார்க்கப்பட வேண்டும் அல்லது மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். பேட்டரி பழுதுபார்ப்பு மற்றும் மறுசுழற்சி இணையதளத்தைப் பார்க்கவும்.

பேட்டரி ஆற்றலைச் சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில் அதை எப்படிச் செயல்படுத்துவது என்பதைப் தெரிந்துகொள்ள, Apple லித்தியம்-அயன் பேட்டரிகள் இணையதளத்தைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.