இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் கால்குலேட்டர் செயலியில் உள்ள கணிதக் குறிப்புகள் மூலம் கணக்குகளுக்கான தீர்வைப் பெறுதல்

நீங்கள் கணிதக்கோவைகளைத் தீர்க்கலாம், மாறிகளை உருவாக்கிப் பயன்படுத்தலாம் அல்லது சமன்பாடுகளுக்கு கிராஃப் வரையலாம். எடுத்துக்காட்டாக, வகுப்பில் புதிய பாடங்களைக் கற்கும்போது, தினசரி பட்ஜெட்டைத் திட்டமிடும்போது, நிகழ்வைத் திட்டமிடும்போது, வீட்டு மறுவடிவமைக்கும்போது மற்றும் பலவற்றிற்கு இதைப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: பொதுவான கணிதக் குறியீடுகளையும், அறிவியல் கால்குலேட்டரில் மேற்கொள்ளும் அதே செயல்பாடுகளையும், எழுத்து வடிவிலான கணிதம் மற்றும் மாறிகளின் பெயர்களுக்காகச் சில தேர்ந்தெடுத்த எண் முறைகளையும் கணிதக் குறிப்புகள் பயன்படுத்துகிறது. iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும் தன்மை குறித்த இணையதளத்தைப் பார்க்கவும்.

கால்குலேட்டரில் ஒரு கணிதக் குறிப்பு திறந்துள்ளது. அதில் வரையறுக்கப்பட்ட மாறிகள், சமன்பாடுகள் மற்றும் கணக்கு தொடர்பான வரைபடங்கள் காட்டப்பட்டுள்ளன.

கணிதக்கோவைகளுக்குத் தீர்வுகாணுதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. “பயன்முறையை மாற்று” பட்டன்-ஐத் தட்டி, “கணிதக் குறிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. ஏற்கெனவே உள்ள கணிதக் குறிப்பைத் திறக்கத் தட்டவும் அல்லது புதிதாக ஒன்றைத் தொடங்க “புதிய குறிப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • கணிதக்கோவையை டைப் செய்து சமக் குறியைச் சேர்க்கவும்.

    • “கையெழுத்து” பட்டன்-ஐத் தட்டி, கணிதக்கோவையைக் கிடைமட்டமாக எழுதிய பிறகு சமன் குறியீட்டைச் சேர்க்கவும்.

    • “கையெழுத்து” பட்டன்-ஐத் தட்டி, எண்களை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதவும், தொகுப்பில் உள்ள எண்களைக் கூட்ட அதற்குக் கீழே ஒரு கிடைமட்டக் கோட்டை வரையவும். வேறொரு கணக்கீட்டைச் செய்ய விரும்பினால், ஒவ்வொரு எண்ணின் இடதுபுறத்திலும் அதற்குரிய குறியீட்டை எழுதவும்.

  5. நீங்கள் எழுதியவற்றில் இருந்து “கணிதக் குறிப்புகள்” என்ன புரிந்துகொண்டது என்பதைப் பார்க்க சமக் குறியைத் தட்டவும். தவறுகளைத் திருத்த, பின்வரும் ஒன்றை நீங்கள் சரிசெய்யலாம்:

    • அடையாளம் காணப்படாத எண்கள் மற்றும் தீர்க்கமுடியாத கணிதக்கோவைகள்: பிழையைப் பற்றிய விவரங்களைப் பார்க்க, புள்ளியிட்ட சிவப்புக் கோடுகளைத் தட்டவும்.

    • தெளிவற்ற எழுத்துகள்: நீங்கள் எழுதியதைத் தெளிவுபடுத்த புள்ளியிட்ட நீலக் கோடுகளைத் தட்டவும்.

    மேலும் அறிய கணிதக் குறிப்புகளில் பிழையைக் கையாளுவது எப்படி என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

கிடைமட்டக் கணக்கீடுகளைச் செய்யும்போது கணிதக் குறிப்புகள் செயலி பொதுவான விதிகளைப் பயன்படுத்தும். எடுத்துக்காட்டாக, கூட்டல் மற்றும் கழித்தல் செயல்பாடுகளைச் செய்வதற்கு முன்பு பெருக்கல் செயல்பாடு முடிக்கப்படும். நீங்கள் முதலில் கணக்கிட விரும்பும் கணிதக்கோவைக்கு அடைப்புக்குறியிடவும். செங்குத்து வாக்கில் எழுதப்பட்ட கணக்கில், கணிதக்கோவைகளை மேலிருந்து கீழாகக் கணிதக் குறிப்புகள் கணக்கிடும்.

கணிதக்கோவைகளில் பயன்படுத்தப்படும் யூனிட்கள் மற்றும் நாணயங்களைக் கணிதக் குறிப்புகள் தானாகவே மாற்றும். நீங்கள் வெவ்வேறு எண் அமைப்புகளைக் கலவையாகவும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, 42 மீட்டர் + 143 அடி. அடிப்படை கால்குலேட்டர் அல்லது அறிவியல் கால்குலேட்டரின் “மாற்றுதல் பயன்முறையில்” உள்ள அதே யூனிட்கள் மற்றும் நாணயங்கள் இதிலும் உள்ளன. யூனிட்கள் அல்லது நாணயத்தை மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

மதிப்புகளைத் திருத்துதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. “பயன்முறையை மாற்று” பட்டன்-ஐத் தட்டி, “கணிதக் குறிப்புகள்” என்பதைத் தட்டி, நீங்கள் மாற்ற விரும்பும் குறிப்பைத் தட்டவும்.

  3. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • எண்ணை அழித்துவிட்டு, புதிய மதிப்பை உள்ளிடவும்.

    • எண்ணைத் தட்டி, எண்ணிற்கு மேலேயுள்ள ஸ்கிரப்பரைப் பயன்படுத்தி மதிப்பில் இட வலமாக ஸ்லைடு செய்து அதை மாற்றவும்.

அந்த மதிப்புகளைப் பயன்படுத்தும் கிராஃப்கள் அனைத்தும் தானாகவே புதுப்பிக்கப்படும். அந்த மதிப்பு ஒரு மாறிக்குப் பதிலீடு செய்யப்பட்டிருந்தால், அந்த மாறியைப் பயன்படுத்தும் சமன்பாடுகளின் தீர்வுகள் அல்லது கிராஃப்களும் தானாகவே புதுப்பிக்கப்படும்.

கணிதக்கோவைகள் மற்றும் சமன்பாடுகளில் மாறிகளைப் பயன்படுத்துதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. “பயன்முறையை மாற்று” பட்டன்-ஐத் தட்டி, “கணிதக் குறிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. கணிதக் குறிப்பைத் தட்டித் திறக்கவும், அல்லது புதிதாகத் தொடங்க “புதிய குறிப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. ஒரு மாறியை வரையறுக்க, மாறியாகப் பயன்படுத்த விரும்பும் எழுத்து அல்லது வார்த்தையை டைப் செய்து அல்லது எழுதி, அதைத் தொடர்ந்து சமக் குறியை இடவும்.

  5. அந்த மாறிக்கான மதிப்பைப் பதிலீடு செய்ய, சமக் குறிக்குப் பிறகு மதிப்பு அல்லது கணிதக்கோவையை டைப் செய்யவும் அல்லது எழுதவும்.

  6. அந்த மாறியைப் பயன்படுத்த கணிதக்கோவை அல்லது சமன்பாட்டில் மாறியின் பெயரை டைப் செய்யவும் அல்லது எழுதவும்.

குறிப்பு: உள்ளீடுகளை மேல் இடதுபுறத்தில் இருந்து கீழ் வலப்புறமாகக் கணிதக் குறிப்புகள் படிக்கும். எனவே நீங்கள் ஒரு மாறியை (எடுத்துக்காட்டாக, x = 5) கணிதக் கோவையில் (எ.கா., x + 10 =) பயன்படுத்துவதற்கு முன்பு அதை வரையறுக்க வேண்டும். மாறியை வரையறுக்காமல் கணிதக்கோவையை எழுதுவது பிழையை ஏற்படுத்தும். மாறியின் பெயர்களில் லத்தீன் எழுத்துகள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும். செங்குத்துவாக்கில் எழுதப்படும் கணக்கில் மாறிகளைப் பயன்படுத்த முடியாது.

நீங்கள் இரண்டு அல்லது மூன்று மாறிகளைக் கொண்ட சமன்பாடுகளைப் பயன்படுத்தி இருபரிமாண அல்லது முப்பரிமாண கிராஃபை வரையலாம்.

முடிவுகளைத் தானாகக் காட்டுதல் அல்லது பரிந்துரைகளாகக் காட்டுதல்

கணிதக் குறிப்புகளில் நீங்கள் உள்ளிடும் கணக்குகளுக்கு உங்கள் iPhone எப்படிப் பதிலளிக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. “பயன்முறையை மாற்று” பட்டன்-ஐத் தட்டி, “கணிதக் குறிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. ஏற்கெனவே உள்ள கணிதக் குறிப்பைத் திறக்கத் தட்டவும் அல்லது புதிதாக ஒன்றைத் தொடங்க “புதிய குறிப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. உரையை உள்ளிடவும் அல்லது “கையெழுத்து” பட்டன்-ஐத் தட்டி உங்கள் விரலால் எழுதத் தொடங்கவும்.

  5. “மேலும்” பட்டன்-ஐத் தட்டிய பிறகு கணித முடிவுகள் என்பதைத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • கணக்கிற்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்று விரும்பினால்: “முடிவுகளைச் சேர்” என்பதைத் தேர்வுசெய்யவும். தீர்வுகாணக்கூடிய கணக்கை நீங்கள் டைப் செய்யும்போது அல்லது எழுதும்போது பதில்கள் தானாகவே காட்டப்படும்.

    • பரிந்துரைகள் காட்டப்பட வேண்டும் என்று விரும்பினால்: “முடிவுகளைப் பரிந்துரை” என்பதைத் தேர்வுசெய்யவும். சமக் குறியை நீங்கள் டைப் செய்யும்போது அல்லது எழுதும்போது அல்லது தீர்வு காணக்கூடிய கணக்கைத் தேர்ந்தெடுக்கும்போது, “தீர்வு காண்க” பட்டன் காட்டப்படும், அதைத் தட்டும்போது பதில் சேர்க்கப்படும்.

    • கணித முடிவுகள் வேண்டாம் என்றால்: “ஆஃப்” என்பதைத் தேர்வுசெய்யவும். கணிதக்கோவைக்குப் பிறகு சமன் குறியீட்டை நீங்கள் டைப் செய்யும்போது அல்லது எழுதும்போது பதில்கள் காட்டப்படாது.

வெளிர் பயன்முறையைப் பயன்படுத்துதல்

கணிதக் குறிப்புகள் இயல்பாகவே அடர் பயன்முறையைப் பயன்படுத்தும் என்றாலும் அதற்குப் பதிலாக நீங்கள் வெளிர் பயன்முறைக்கு மாறலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. “பயன்முறையை மாற்று” பட்டன்-ஐத் தட்டி, “கணிதக் குறிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. முந்தைய கணிதக் குறிப்பைத் தட்டித் திறக்கவும் அல்லது புதிதாகத் தொடங்க “புதிய குறிப்பு” பட்டன்-ஐத் தட்டி, உரையை உள்ளிடவும் அல்லது எழுதவும்.

  4. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “வெளிர் பயன்முறை” என்பதைத் தட்டவும்.

குறிப்புகளில் வரிகள் அல்லது கிரிட்களைக் காட்டலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.